Saturday, 22 July 2017

மலரும் இனிய நினைவுகள்..
கடந்த ஆண்டு முகநூல் மீள்பதிவு..
என் மனைவியை முதன் முதலில் பார்த்த நாள் இன்று..




பொண்ணு பார்க்கப் போனேன்..

அது ஒரு ஆடி வெள்ளிக்கிழமை.. ஆம் அதுவும் இதே ஜூலை 22, ஆனால் வருடமோ 1991.

முதல்நாள் மாலை மதுரையிலிருந்து மாயூரம் பயணம். நானும் எனது அலுவலக நண்பர் அமரர் கோபாலகிருஷ்ணன் என்பவரின் அண்ணன் அமரர் பழனிச்சாமியும்.. இவர் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் தோட்டத்தில்
பாடிகார்ட் ஆக பணிபுரிந்து, பின்னாளில் கைரேகை, ஜோதிடம் பார்த்து வந்தார்..

புறப்படும் முன்னரே என் இல்லத்தாரை தவிர்த்து அலுவலக நண்பர்களோ, உறவினர்களோ, "என்ன ஆடி மாதத்திலப் போயி பெண்பார்ப்பதா?.. ஆடி மாசத்துல திருமணப் பேச்சே எடுக்க மாட்டாங்களே? அப்புடி இப்புடின்னு ஒரே அங்கலாய்ப்பு."

அதுக்கு ஏற்ற மாதிரி ஜூலை 22 அரசே அறிவிப்பு செய்த 'பந்த்' வேறு.. புறப்படும் முன்னர் நண்பர் பழனிச்சாமி அவர்கள், அண்ணா பேருந்து நிலையத்தில் (அப்ப மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் கிடையாது), 'தம்பி இன்னைக்கு போகணுமா? நாளைக்கு பந்த் வேறு' என்கிறார். நானோ, ' இல்லை அப்பெண் தை வெள்ளியில் பிறந்தவள், மேலும் நாளை ஆடி முதல் வெள்ளி மட்டுமன்று. முழுமதி நாளும்கூட. எனவே, சென்றே ஆக வேண்டும்' என்று கூறினேன்..

பின்னர் அவர் முழுமனதோடு தஞ்சை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார். எங்கள் பயணம் தொடர்கிறது.
பேருந்து புதுக்கோட்டையை விட்டு கிளம்பி தஞ்சை செல்லும் சாலையின் ஓரத்தில்வயலில் ஒரு அழகு மயில் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்தது..
அண்ணன் பழனிச்சாமி என்னைத் தட்டி, 'தம்பி அங்க பாருங்க மயிலை. நீங்க பார்க்கப்போற பொண்ணுதான் உங்கள் மனைவின்னு எழுதி வச்சுக்குங்க. பொண்ணோட பேரு சகுந்தலா. மயிலுக்கு இன்னொரு பேரு சாகுந்தலம். பொண்ணை பார்க்குறதுக்கு முன்னரே அந்த சகுந்தலாவை பார்த்துட்டீங்க.. எனவே, கண்டிப்பா நாளைக்கு முடிவாயிடும்' என்றார்..

இப்பெண்ணை பார்ப்பதற்கு முன்னர் ஏறத்தாழ இருபது பெண்களாவது பார்க்க எனது மூத்த தங்கையும், எனது அத்தானும் வந்திருப்பார்கள். எல்லாப் பெண்களும் ஒன்று வேலை பார்ப்பார்கள் அல்லது என்னை விட அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள், எனவே, நான் தவிர்த்து விட்டேன்..

இதனால், எனது இல்லத்தினர் இம்முறை என்னை மட்டும் சென்று பார்த்து விட்டு பிடித்திருந்தால் சொல். பேசி முடிக்கலாம் என்று சொல்லியதால்தான் நான் அண்ணன் பழனிச்சாமி மட்டும் சென்றோம். இரவு மாயூரம் சென்று எனது ஒன்று விட்ட அண்ணன் சி.பொற்செல்வன் அவர்கள் இல்லத்தில் தங்கினோம். இவர் தற்போது செசில்ஸ் தீவில் இருக்கிறார்..

மாலை ஐந்து மணிக்கு வருவதாக சொல்லி இருந்தோம். பந்த் காரணமாக ஒரு முழம் பூ வாங்கவோ, பெண் வீட்டுக்கு ஸ்வீட் வாங்கவோ முடியாத நிலை..

மாலை ஐந்தரை மணியளவில் மயூரநாதர் கோவில் அருகே ஒரு பெண் 'பூ'க்கட்டி விற்பதாக தகவல். அவசவசரமாக, அப்பெண்ணிடம் ஒரு பத்து முழம் பூ வாங்கி கொண்டு, கோமதி தியேட்டர் எதிரில் உள்ள கொண்டத்தூர் பிள்ளை வீடு எது என்று விசாரித்து சென்றோம்..

நான், நண்பர், எனது அண்ணன், அண்ணி ஆகியோர் சென்று அறிமுகப்படுத்தி கொண்டோம். பெண்ணின் சகோதரிகள் ஸ்வீட், காரம் கொண்டு வந்து வைத்தனர். பின்னர் காப்பியை பெண்ணின் கையில் கொடுத்து அனுப்பினர். அதற்கு முன் அப்பெண், ஒருஅறையின் மூலையில் கதவிடுக்கின் வழியாக என்னை ஓரக்கண்ணால் பார்ப்பதை நானும் திருட்டுத்தனமாக பார்த்தேன்.

காப்பி வைத்ததுதான் தாமதம் மின்னலாக ஓடிச் சென்று விட்டாள். காப்பி அருந்தி முடித்ததும், பெண்ணின் அண்ணன், 'என்ன,பெண்ணைப் பிடித்திருக்கிறதா?' என்று வினவினார்..

நானோ, 'பெண்ணை எங்கே முழுசாப் பார்த்தேன். மின்னல் போல அல்லவா உங்கள் தங்கை சென்று விட்டது. மேலும், பெண்ணுக்கு என்னைப்பிடித்துள்ளதா? என்று முதலில் கேட்டுச் சொல்லுங்கள்' என்றேன்.

நண்பர் பழனிச்சாமி அந்த அறைக்கு சென்று அப்பெண்ணிடமே நேரில் பிடித்திருக்கிறதா? என்று கேட்டு பெண்ணின் அண்ணன் போன்று அப்பெண்ணை என் முன் அழைத்து வந்து பார்க்கவைத்தார்..

நான் ஊருக்கு சென்று அம்மா, சகோதர,சகோதரிகளிடம் கேட்டு விட்டு ஓரிரு நாளில் தெரிவிப்பதாக கூறி புறப்பட்டோம்..

இரவு ஏழு மணி இருக்கும் நகரப் பேருந்துகள் மட்டும் இயங்க ஆரம்பித்து இருந்தது.. நானும், பழனிச்சாமி மட்டும் திருக்கடையூர் சென்று வர தீர்மானித்து சென்றோம். திருக்கடையூர் சென்று காலசம்காரமூர்த்தி, அமிர்தகடேஸ்வரர் உடனுறை அபிராமி அம்மனை தரிசனம் செய்து விட்டுவெளியே வந்தால், மாயூரத்துக்கு திரும்பிட பேருந்து இல்லை.. என்னடா இது சோதனை என்று இரவு பதினோரு மணி வரை காத்திருக்கிறோம்...

அப்போது காரைக்கால் பக்கமிருந்து வேகமாக வந்த கார் ஒன்று, 'தேமே' என்று விழித்துக்கொண்டிருந்த எங்கள் முன் வந்தது. மாயூரம் செல்லும் வழி எது? என்று அந்த காரின் ஓட்டுநர் (இவர் சென்னையிலிருந்து ஒரு நோயாளியை காரைக்கால் கொண்டுவந்து விட்டுவிட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்தவர்) வினவினார்.

அபிராமி அம்மனே அனுப்பியது போன்று ஒரு உணர்வு. நாங்களும் மாயூரம் செல்ல காத்திருப்பதாகவும், வரலாமா? வழியும் காட்டுகிறோம் என்றோம். இசைவளித்த ஓட்டுனரின் உதவியுடன் மாயூரம் நள்ளிரவு வந்து சேர்ந்து அண்ணன் வீட்டில் சென்று தங்கி மறுநாள் மதுரை வந்தடைந்து நடந்தவற்றை வீட்டில் கூறினேன்.

அடுத்த ஆவணி மாதமே, அதாவது 23.08.1991 இல் திருமண நிச்சயதார்த்தம் செய்வது என்று முடிவெடுத்து, பெண் வீட்டுக்குத் தெரிவித்தேன். இன்றோ 26 ஆவது ஆண்டு பிறக்கிறது..

"ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்..
கோடி இன்பம் தேடி வரும் காவிரியின் ஓரம்.." என்ற பாடல் எங்களுக்காக எழுத்தப்பட்டதோ என்று அடிக்கடி நினைத்து கொள்வேன்..

அவளை கரம் பிடித்து வெள்ளி விழா ஆண்டில், சஷ்டியப்த பூர்த்தியும் நிகழ்ந்துவிட்டது...

ஆகவே, ஆடி மாதம் திருமணம் பேசிட உகந்த மாதமே... "ஆடிப்பட்டம் தேடி விதை" என்று சும்மாவா? சொன்னார்கள்.. மேலும், நானே, ஆடி மாதத்தில் கருவாகி, சித்திரையில் தரணியில் உருவானவனல்லவா?

Monday, 22 February 2016


மகாமகம் அறிவோம்..

அதென்ன? "மகாமகம்"..

முதலில் பனிரெண்டின் மகிமை  அறிவோம்...

பகல் பொழுது - இரவு  பொழுது  பனிரெண்டு  மணி நேரம்..
 மாதங்கள் - இராசிகள்  பனிரெண்டு..
1. சித்திரை (மேஷம்)     
2. வைகாசி (ரிஷபம்)
3. ஆனி (மிதுனம்)
4. ஆடி (கடகம்)
5. ஆவணி (சிம்மம்)
6. புரட்டாசி (கன்னி)
7. துலாம் (ஐப்பசி)
8. விருச்சிகம் (கார்த்திகை)
9. தனுசு (மார்கழி)
10. மகரம் (தை)
11. கும்பம் (மாசி)
12. மீனம் (பங்குனி)

நவகிரகங்களில் சூரியன் (சிம்மம்) மற்றும்  சந்திரன் (கடகம்) இரண்டுக்கு மட்டும்  ஒரே வீடு..

மற்ற கிரகங்களான செவ்வாய் (மேஷம், விருச்சிகம்), புதன் (மிதுனம், கன்னி), குரு (தனுசு,மீனம்), சுக்கிரன் (ரிஷபம், துலாம்) ஆகியவற்றுக்கு தலா இரண்டு வீடுகள்.

இராகு - கேதுக்கு தனி வீடுகள் அல்ல..

சூரியனை, ஒவ்வொரு கிரகமும் சுற்றி  வருவதை இராசியில் சஞ்சரிக்கும் காலமாக கணக்கிடப்படுகிறது.

அதென்ன? சந்திரன் இரண்டே கால் நாள் என்கிறீர்களா? நட்சத்திரங்கள் 27. அவையாவன " 

1. அசுபதி, 
2.பரணி, 
3.கார்த்திகை,
4. ரோஹினி , 
5.மிதுனம், 
6.திருவாதிரை, 
7.புனர்பூசம், 
8.பூசம், 
9.ஆயில்யம், 
10.மகம்,
11. பூரம், 
12. உத்திரம், 
13. ஹஸ்தம், 
14.சித்திரை,
15. சுவாதி, 
16.விசாகம், 
17.அனுஷம்,
18. கேட்டை, 
19.மூலம், 
20. பூராடம், 
21.உத்திராடம்,
22. திருவோணம், 
23. அவிட்டம்,
24.சதயம், 
25.பூரட்டாதி,  
26.உத்திரட்டாதி,
27.ரேவதி ஆகியனவாகும்.

ஓவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்படுகிறது.
அதாவது 27 நட்சத்திரங்களும் 108 பாதங்களாக பகுக்கப்படுகிறது. 
இதனடிப்படையில்தான் ஓவ்வொரு கடவுளுக்கும் நாமவாளி அர்ச்சனை செய்யும் போது 108 பதங்களாக துதித்து அர்ச்சிக்கப்படுகிறது போலும்...
ஒவ்வொருவரும் தங்களை காத்திட 108 துதிகள்  வேண்டுவது போன்று, அவசர சிகிச்சைக்கு வரும் ஆம்புலன்ஸ் வண்டியின் எண் அழைப்பும் 108 என்பதும்  ஆச்சரியமன்றோ?..

சூரியன் ஒவ்வொருமாதமும் ஒரு வீட்டில் சஞ்சரிக்கிறார்...
சந்திரன் இரண்டே கால்  நாட்களுக்கு  ஒரு வீட்டில் சஞ்சரிக்கிறது.
வியாழன் (குரு) ஒவ்வொரு  ஆண்டும் ஒரு வீட்டில் சஞ்சரிக்கிறார்..
சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு வீட்டில் வசிக்கிறார்..
இராகு - கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு வீட்டில் சஞ்சரிக்கிறார்.
மற்ற கிரகங்களுக்கு வேறுபட்ட கால அளவில் (ஒரு மாதத்துக்குள்) சஞ்சரிக்கிறது.

சூரியனும் - சந்திரனும் ஒரே வீட்டில் இருக்கும் காலம் அமாவாசை எனவும், சூரியனுக்கு நேரெதிரே ஏழாவது வீட்டில் சந்திரன் இருக்கும் காலம் பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் மாசி மாதம் சூரியன் இருக்கும் கும்ப இராசியிலிருந்து ஏழாவது வீடான, சிம்ம இராசியில் மக நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளன்று "மாசி மகம்" என்று சிவலாயங்களில் வழிபாடுகளும், தீர்த்தவாரியும் நடைபெறும்.

வியாழனாகிய  குருவோ, சிம்ம இராசிக்கு வாசம் செய்வது பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இப்படி குருவும், சந்திரனும் இணைந்து சிம்ம இராசியில் இருக்கும் காலத்தில், சூரியன் வாசம் செய்யும் மாசி (கும்பத்தில்) மாதத்தில் வரும் மக நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளை "மகாமகம்" என்றழைக்கப்படுகிறது.

அதாவது, சூரியன் தனது மகனான சனியின் வீட்டிலிருந்து, தனது சொந்த வீட்டுக்கு வரும் குரு - சந்திரனை ஏழாவது பார்வையாக பரிவர்த்தனையாக பார்த்துக்கொள்ளும் நிகழ்வே "மகாமகம்" என்று அழைக்கப்படுகிறது..

'மகாமகம்" கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடுவது ஏன்?..

காஞ்சி  மாநகருக்கு அடுத்து அதிகமாக கோவில்கள் நிறைந்த ஊர் கும்பகோணம். இவ்வூரின் மத்தியிலிருந்து எந்த கோணத்தில் நோக்கினாலும், ஒரு சிவாலய கோபுர கலச கும்பம், கண்களில் தென்படும். எனவே, இந்நகருக்கு "குமபகோணம்" என்று பெயர் வந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. 

மூன்று நதிகள்  சங்கமிக்கும் அலகாபாத் நகரில் கொண்டாடப்படுவது "கும்பமேளா" என்றழைக்கப்படுகிறது..

கும்பகோணத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மாசிமகத்தை "மகாமகம்" என்றழைக்கப்படுகிறது. 

இந்நாளில், நாட்டில் உள்ள அனைத்து புனித நதிகளும் "மகாமக'" குளத்தில் சங்கமிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இங்குள்ள பனிரெண்டு சிவாலயங்களில் இருந்து வரும் பனிரெண்டு உற்சவமூர்த்திகளும், சாரங்கபாணி கோவிலிலிருந்து வரும் பெருமாளும் எழுந்தருளி, காட்சி தந்து சமய - வைஷ்ணவ ஒற்றுமையை உணர்த்துவதுதான்  தனிச் சிறப்பு. காவிரி பாயும் கும்பகோணத்தில், நீராடி, பொற்றாமரை  மற்றும் மகாமக குளத்தில் குளித்தால், தங்களின் முன்வினைகள்  களையப்படுவதாக ஐதீகம். 

காவிரியில், ஆண்டு முழுதும் ஆற்றுப்படுகையில் கரைபுரண்டு ஓடும் நீரினால், இங்குள்ள பொற்றாமரைக் குளமும், மகாமக குளமும் இயற்கையாக ஊற்று  நீரால்  நிரம்பி அழகுறுத் தோற்றத்துடன் காணப்படும். .

ஆனால். கர்நாடக அரசின் வஞ்சனையால், காவிரி நீர் வரத்து நின்றதால், ஊற்றெடுக்க வேண்டிய குளங்களில், காவிரி நீரை செயற்கையாக ஊற்றி நிரப்பிட வேண்டிய அவலம். (இங்கும் செயகைதானோ?) 

சென்னையில், செயற்கைப் பேரிடர் என்று கூறியபோது  "இல்லை..'இல்லை.... இயற்கைப் பேரிடர் என்று"..மறுத்த தமிழகஅரசு இப்போது கூற முடியுமா?  இந்த ஆண்டு  இயற்கையான  ஊற்றால் நிரம்பிய மகாமக குளமென்று. நிச்சயம் கூற முடியாது என்பதே யதார்த்தம்....

உடன்பிறவா சகோதரியுடன் கடந்த மகாமகத்துக்கு  நீராடல் சென்று .அரங்கேறிய சோக நிகழ்வின்றி, ஒரு வழியாக இந்த ஆண்டு மகாமகம் நிம்மதியாக முடிந்துள்ளது. இந்த வருட  மகாமகத்தை அமைதியாக நடத்திட முழு முதற் காரணம், மாவட்ட ஆட்சியர் திரு.சுப்பையன் அவர்களும், டி.ஐ.ஜி திரு. செந்தாமரைக்கண்ணன் அவர்களுமே என்றால் அது மிகையல்ல. அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அசம்பாவிதங்களை தவிர்த்திடும் வண்ணம் முதலவர் வரமால் இருந்ததுக்கு அவருக்கும் நன்றி பாராட்டுவோம்.  

நான் பிறந்ததே மகாமக  ஆண்டில்தான் (1956). மகாமகம் வரும் ஆண்டுகளுக்கு தனிச்சிறப்பெனில், 366 நாட்கள் கொண்ட லீப் வருடம் என்பதும் ஆகும்.

மகாமகம் காண  செல்லவில்லையே என்று நினைப்போர், வீட்டில் குளிக்கும் போது நீரை மகாமக தீர்த்தமாக நினைத்து குளித்து, சூரியனை வழிபடுங்கள். முடிந்தால் தினமும் காக்கைக்கு உணவு வையுங்கள். முன்வினை தீரும்..



Wednesday, 11 November 2015

தீபாவளி - தீவாளி - தீபஒளித்திருநாள்.
"கேதாரேஸ்வரர் அல்லது கேதாரகௌரி நோன்பு"

தீபாவளி என்பது சமஸ்கிருத வார்த்தை..

தீபம் என்பது ஒளியைக்குறிக்கும்.. ஆவளி என்பது வரிசை என்பதாகும்..

கார்காலம் தொடங்கும் தமிழ் மாதமான ஐப்பசியில், தேய்பிறை காலத்தில், பதினான்காம் நாளன்று (சதுர்தசி) நரகசதுர்தசி என்றும், அதற்கு அடுத்துவரும் அமாவாசை நாளில், "கேதாரகௌரி" விரதம் எடுக்கின்றனர்.

பொதுவாகவே, நாட்டில் கொண்டாடப்படும் அனைத்து விழாக்களும், குறுவை - சம்பா - தாளடி பருவங்களில் அறுவடை செய்த பின்னர் சூரியன் - நிலம் - நீர் - வான் - காற்று ஆகியவற்றுக்கு நன்றிதெரிவித்து அறுவடைத் திருநாளாகவே கொண்டாடி வந்துள்ளனர் என்பதே நிதர்சனம்.

பின்னர், அந்தந்த பருவங்களை ஒட்டி தீபாவளி - பொங்கல் - சித்திரைத் திருநாள் என்று வகைப்படுத்தி, அதையொற்றி புத்தாடைகள் எடுத்து, பலகாரங்கள் செய்து தங்கள் உறவுகளை பலப்படுத்திட கொண்டாட ஆரம்பித்துள்ளனர் என்றே கருதுகிறேன்.

தட்சிணாயனம் : சூரியன் ஆடி மதம் முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறுமாத காலம், வடதிசையிலிருந்து, தென்திசைநோக்கி பயணம் செய்யும் காலமாகும். இதில் ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் பகல் நேரம் குறைவு.

இருள் நிறைந்த இம்மாதங்களில், விளக்குகளை வரிசையாக அணிவகுத்து ஏற்றிவைத்து தீப ஒளியினைப் பரவச் செய்துள்ளனர்.
இதுவே பின்னாளில், தீபஒளித் திருநாள், தீபாவளி என்றும், கார்த்திகை தீபத்திருநாள் என கொண்டாடப் பட்டுள்ளது போலும்.

பின்னாளில், புராணக்கதைகளின் படி, பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து வந்த இராமனுக்கு வரிசையாக விளக்கேற்றி வரவேற்றதாக ஒரு காரணமும் சொல்லப்பட்டது.

பவுமன் என்பவன் அவதரித்த போது (மகாவிஷ்ணு- பூமாதேவிக்கும் பிறந்தவன்) அவன் பிரமம்னை வணங்கி தனக்கு மரணம் என்பது எனது தாயினால் மட்டுமே நிகழவேண்டும் என்று வரம் பெற்றானாம். அவன் வளர்ந்து அரக்கனாக மாறி மனிதக்குலத்துக்கு இன்னல்கள் விளைவித்து "நரகன்" என்றுப் பெயரால் அழைக்கப்பட்டுள்ளான்.

நரகனின் மக்கள் விரோதப்போக்கை கண்ட திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்து சத்யபாமாவின் துணையுடன், நரகன் என்ற அசுரனை, அழித்தொழித்ததை கண்ட மக்கள் மகிந்து, விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாடினர். அதுவே தீபாவளி ஆனது என்று ஒரு காரணமும் பகரப்பட்டது.

இந்த தீபஒளித் திருநாள், இந்தியா மட்டுமின்றி, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது..

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து, எண்ணெய்க் குளியல் (கங்கா ஸ்நானம்) செய்வர். நல்லெண்ணெய் தேய்த்து, சீகைக்காய் கொண்டு தலைக்குளித்து, புத்தாடை அணிந்து, பலகாரங்கள் செய்துண்டு, பட்டாசுகள் வெடித்து ஆனந்தித்திருப்பார்கள்.

இவ்விழாவையொட்டி இனிப்புக்கள் வகைவகையாக செய்து (குறிப்பாக அதிரசம், சீடை, முறுக்கு, தட்டை, சீயம் மற்றும் வடை, மிச்சர் என்று..) ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர்.

பெற்றோர் - பெரியோரை வணங்கி வாழ்த்துகள் பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மதம் களைந்து ஒன்றுபட்டு, அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபஒளித் திருநாளாகும்..

சைவவேளாண் மக்கள் கந்தப்புராணத்தில், ஐப்பசி மாதம் அமாவாசை நாளில், (தீபாவளியன்றோ அல்லது அடுத்த நாளிலோ), அதற்கு முந்தைய புரட்டாசி மாதம் அஷ்டமி திதி நாளிலிருந்து விரதம் மேற்கொண்டு, கேதாரேஸ்வரர் அல்லது கேதாரகௌரி நோன்பு என்றப்பெயரில் கொண்டாடி வருகின்றனர். தெலுங்கு மொழி பேசுவோர் அனைவருமே இந்நோன்பை மேற்கொள்கின்றனர்.

இந்நோன்பு குறித்து சிலவிவரங்கள்..

ஐப்பசி மாதம் அமாவாசை கூடியநன்னாளில் சிறந்த இக்கேதாரேஸ்வரர் விரத பூஜையைச்செய்யவேண்டும் என்பது கந்தப்புராண வாக்கு. இந்தக் கேதாரேஸ்வரர் கதையைக் கேட்பதால் சகல சௌபாக்கியங்களும், ஐஸ்வர்யங்களும் பெருகும், ஆரோக்கியம் அனைத்தும் விருத்தியாகும்.

இவ்விரத பூஜையை இருபத்தியொரு வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பரிபூரண பலன் இகத்திலும், பரத்திலும் கிட்டிடும் என்பது எம்பெருமான் வார்த்தையாகக் கௌதமர் கூறியுள்ளார்.
மேலும் இந்தப்பூஜையால் சௌபாக்கியம் மட்டுமின்றி மிகுந்த சோபையையும் விரும்பிய பயன்களையும் பெறுவது திண்ணம். சிவலோகத்திலும் சிறப்படையலாம்.

இப்பூஜையை மிகுந்த அடக்க ஒடுக்கத்தோடு அனைவரும் செய்யலாம். அதாவது புரட்டாசி மாதம் அஷ்டமிதிதி சுக்ல பட்சத்திலிருந்து இப்பூஜையைத் தொடங்கி, அமாவாசை வரை செய்ய வேண்டும் என்கிறது கந்தப்புராணம். மஞ்சள் சரடுகளைக் கைகளில் கங்கணமாகக் கட்டிக்கொண்டு சுத்தமான இடத்தில் ஒரு கும்பத்தைப் பூஜையில் உள்ளபடி அலங்கரித்து வைத்து பட்டுத் துணியாலும், இருபத்தியொரு சரடுகளாலும் சுற்றி அதில் நாணயங்கள் போட்டு, அல்லது நவரத்தினம், தங்கம், பவளம் போட்டு சந்தனம், மலர்கள் கொண்டு முறைப்படி அர்ச்சித்து 7 X 3 = 21 மறையோர்களையும் வழிபட்டுப் பூஜையைசெய்யவேண்டும். எனவேதான், இப்பூஜையில் மலர்கள் என்றாலும் பலகாரங்கள் என்றாலும் (குறிப்பாக அதிரசம்), விரளிமஞ்சள், வெற்றிலை, முழுமையான பாக்கு, பழங்கள் என அனைத்துமே இருபத்தியொன்று என்ற எண்ணிக்கையில்தான் வைத்துப் பூஜிக்கபடுகிறது. அது தருணம், காப்பு, நோன்பு முறைகள், நாமாவளிகள் மற்றும் கேதாரேஸ்வரர் கதையைக் கூறக் கேட்டு பூஜித்து வழிபடுகின்றனர்..



இப்படிச் சோழனொருவன் பூஜைசெய்துமிகுந்தப் பலனைப் பெற்றானாம்.அதன் பொருட்டு சோழ மண்டலத்தைச் சார்ந்த எங்கள் மூதாதையர் காலம் முதல், தொன்றுத் தொட்டு இவ்விரதம் மேற் கொண்டு வருகிறோம்.

இந்த ஆண்டு எங்கள் இல்லத்தில் கேதாரகௌரி நோன்பு அம்மனின் வழிபாட்டுடன்.. அன்பு வணக்கம்..



Sunday, 21 June 2015

மாமதுரை போற்றுதும்..மாமதுரை போற்றுதும்..






என்னடா? வாரந்தோறும் ஞாயிறு அன்று, ஞாயிறு போற்றுதும்..ஞாயிறு போற்றுதும் என்றுதானே பதிவிடப் படும். 

அது என்ன?   மாமதுரை போற்றுதும். என்ற வினாக்கு விடை :

இன்று இரவு விஜய் தொலைக்காட்சியின் நீயா? நானா? முதலில் தெரிவித்த தலைப்பு . "மதுரையின் தொன்மை குறித்து விவாதிப்போம்" என்று தெரிவிக்கப்பட்டது.

பாத்திமாக் கல்லூரியின் வாசலில், 18.06.2015 மாலை நான்கு மணிக்கு என்று தெரிவிக்கப்பட்டு, பின்னர் மாலை 06.30 மணி என்று கூறப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கிய நேரமோ சுமார் 07.40 மணிக்கு.

திருவாளர்கள் முத்துகிருஷ்ணன், குணா, ஆத்மார்த்தி,  தூங்கா நகரம் பட இயக்குனர் கெளரவ், அமெரிக்கன் கல்லூரியின்  பேராசிரியர்கள் அழகேசன்,  நடிகர் சண்முகராஜா (இவர் நிகழ்ச்சி தொடங்கி 30 நிமிடங்கள் கழித்து வந்தார்) மற்றும் சில வழக்கமான நீயா? நானா? அமர்வில் வரும் ஆஸ்தான  நபர்கள்  முழுதும்  முதல் வரிசையின் ஆக்கிரமிப்பில்.. அழைக்கப்பட்ட மதுரை  மக்கள் சுமார் நாற்பது நபர்கள் இருபுறமும் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் அமர வைக்கப்பட்டோம்.

முதலில், நெறியாளர் கோபிநாத் சென்னையிலேயே படம்பிடிக்கப்பட்டு வந்தாலும், நீயா? நானா? நிகழ்வில், தென்மாவட்டங்கள்  பகுதியைச் சார்ந்தோரே அதிகம் கலந்துகொண்டதாகவும், ஏன் அம்மக்கள் இருக்கும் மதுரையிலேயே படப்பிடிப்பை நடத்தலாமே என்று எண்ணி இந்த பாரம்பரியமிக்க பாத்திமாக் கல்லூரியில் நடத்திட  வந்துள்ளோம். என்று கூறிவிட்டு  முதலில், மதுரையின் அழகு என்ன? என்ற கேள்வியைத் தொடுத்து மூன்றாவது வரிசையில், அமர்திருந்த பங்கேற்றவர்களை நோக்கி மைக் தரப்பட்டது. 

ஒவ்வொருவரும், மதுரையின் சிறப்பை கூறிட முனையும் முன்னரே, அது இல்லை. வேற வேற, மைக்கை அடுத்தவரிடம் கொடுங்கள் என்று பயணித்தது. கோபிநாத் இரண்டாம் - மூன்றாம் வரிசையில் பங்கேற்றறோரின்  கருத்துக்களை உள்வாங்கிடவே மறுத்தார்.

முதலில், மதுரையின் அழகு குறித்து பார்ப்போம்.

1. மதுரைக்கு அழகு அன்னை மீனாக்ஷி - சொக்கநாதர் திருக்கோவில் அழகு.

2. கோவிலை சுற்றி சதுர  வடிவில் அமைந்த தெருக்கள் அழகு.

3. ஆண்டுமுழுதும் நாள்தோறும்  ஒரு திருவிழா நடைபெற்று வரும், ஆடி வீதிகள், சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள் என வடிவமைக்கப்பட்ட அழகு.

4. மதுரை மண்ணின் மக்கள் மனசை போன்ற "மல்லிகையின்" மணம் அழகு.

5.மதுரைக்கே உரித்தான "ஜில்..ஜில்.ஜிகர்தண்டா" அழகு.

6.வீரம் சொறிந்த பெண்ணின் நளினம் அழகு.

7.திரைத்துறையை சார்ந்தோரின் பார்வையால், இரத்தம் தோஞ்சப்  பூமி என்று தவறாக சித்தரிக்கப்பட்ட, இம்மதுரையில்தான்,  மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உயிர் துறந்தபோது அணிந்திருந்த இரத்தம் தோஞ்சச்  சட்டையை, அமைதியைப் போதிக்கும் வண்ணம் தாங்கி  பாதுகாத்து வரும், காந்தி நினைவிடம்  அமைந்துள்ளது ஒரு அழகு.

8.நான்மாடக் கூடல் என்று பெயர்பெற்ற மதுரையில் நான்கு புறமும், ஒவ்வொரு திசையிலும் தோரணவாயிலாக,  எழில் சூழ அமையப்பெற்ற யானை மலை, பசுமலை, நாக மலை, அழகர் மலை அழகன்றோ.

9. அழகு முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டு படை வீடுகள் திருப்பரங்குன்றம் மற்றும் பழமுதிர்ச்சோலை அமையபெற்றதும்  அழகு.

10. முத்தமிழ் வளர்த்த மதுரையம்பதி என்பதால், வைஷ்ணவப் பெரியோர் ஆழ்வார்கள், போற்றிப் பாடிய  108 திருப்பதிகளில், மூன்று திருப்பதிகள் (அழகர் கோவில் - கள்ளழகர் திருக்கோவில்,   திருமோகூர் - காளமேகப் பெருமாள் திருக்கோவில், கூடலழகர் பெருமாள் திருக்கோவில்) அமையப்பெற்றது  அழகன்றோ.

11.கோடிக்கணக்கான மக்கள் சென்று வரும் திருப்பதிக் கோவிலை நிர்மாணித்து - கட்டித்தந்த திருமலை நாயக்கர் மன்னனின் கனவில் வந்து, 'நீ நித்தமும் என்னைத் தொழ மதுரையிலேயே எழுந்தருளுகிறேன்' என மொழிந்து பிரசன்ன வெங்கடாச்சலபதியாக  காட்சி தந்து, கட்டப்பட்ட தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாச்சலபதி  திருக்கோவில் அமைந்துள்ள அழகு.

12.எந்த ஒரு சுற்றுலாத்தலங்களுக்கும் குறிப்பிட்ட சீசனில் மட்டும் குவியும் வெளிநாட்டினர் போன்று இல்லாது, ஆண்டு முழுதும், நாள்தோறும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழும் மன்னர் திருமலை நாயக்கர் மஹால், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சமணர்கள் தங்கி வாழ்ந்த சமணப்படுகைகள் என அடுக்கிடும் வகையில் அமைந்துள்ளதும் அழகன்றோ.

13. நாடகத்தமிழை வளர்த்த சுவாமி சங்கரதாஸ் பிறந்து, நாடகக் கலைகள் வளர்த்து, அது இன்றும் தொடரும் அழகோ அழகு.

14. மதுரை புரோட்டாக் கடைகளில், இரவில் போடப்படும் முட்டைப் புரோட்டா தருணத்தில் வரும் இசை, 'டண்டண் - டண்டண் - டண்டண்' என்ற இசை இலயம் இன்று தமிழ் சினிமாக்களின் குத்துப்பாடல்களின் இசையாக ஒலிப்பது அழகன்றோ.

15. அக்கா மக்கா - மாமு மச்சி மாப்பிள்ளை - சித்தப்பு பெரியப்பு -  அண்ணே தம்பீ என்று சாதிப் பார்க்காது உறவுமுறைக்  கூறி வாழும் "பாசப்பயபுள்ளைக" நிறைந்த வாழ்க்கை முறை அழகன்றோ. 

16. அலுவலகம் சென்றாலும், வீட்டில் இருக்கும் உள்ள மனநிலையை தரும்வகையில், எந்த ஒரு பிரச்சினை என்றாலும், வீட்டுக்கு  சென்றடையமுடியும் என்ற தன்னம்பிக்கை தரும் வண்ணம் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்த மதுரையின் அமைப்பு ஒரு அழகன்றோ.      

17. மதுரை வாழ் மக்கள், ஒவ்வொரு திரைப்படங்களையும் அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து, அப்படங்களின் டி.சி.ஆர் (டெய்லி கலெக்சன் ரிப்போர்ட்) யை தீர்மானிக்க  வைக்கும் ஆற்றலும்  ஒரு அழகன்றோ.  

18.நீண்டு பரந்துவிரிந்த வைகைக் கரை அழகன்றோ. இப்படி அழகாய் பற்றி விவரிக்கவே நெடுந்தொடர் போன்று "நீயா? நானா?' நிகழ்ச்சி பயணிக்க முடியும்.

ஆனால், முத்துக்குமார் இட்லி சுற்று விற்கும் கைம்பெண்களை பற்றி கூறி அது அழகு என்று சொல்லிட, இது இதுதான் நான் எதிர்பார்த்தது என்று கோபிநாத் சிலாகிக்க, இரட்டைக்குவளை முறை, சாதீய மோதல்கள் என முத்துக்குமார் "ப்யுடலிசம்" நிறைந்த ஊர் என்று ஆரம்பித்து, தலைப்பு  திசைமாறிப் பயணித்தது. பின்னர் தமிழ்நாட்டின் சாதீய ஆதிக்கம், நில பிரபுத்துவம் என திசைமாறிய பயணமாக மாறி, உள்ளுரிலிருந்து அழைக்கப்பட்டவர்களின்  கருத்துக்கள் ஏற்க மறுக்கப்பட்டன.

பின்னர், கவுரவ் - குணா ஆகியோர் சசிகுமார் - பாலா - அமீர் போன்றவர்களால், தமிழ்ப்படங்களில்,  மதுரை சிதைந்து விட்டதாக கூறி , சாதியம் குறித்த விவாதமாக மாறி அருகில் இருந்த பெண்கள் எல்லாம், என்ன இப்படி 'மொக்கப் போடுறானுக' என புலம்பல் ஒலிக்க ஆரம்பித்தது.

அதை எனக்கு அருகில் அமர்ந்திருந்த அன்பர், மதுரைக்கே உரிய கோபத்துடன் கத்திவிட்டார். உடனே, கோபிநாத், என்னிடம் இன்னும் 1800 கேள்விகள் உள்ளன இருங்கள் என்று அமைதிப்படுத்த வேண்டிய சூழ்நிலை.

பின்னர் உலகமயமாக்கல் வந்தபின்னர் மதுரையின் பழமை மாறிவிட்டதா? அதனால் கிட்டிய பலன் என்ன? பாதிப்பு என்ன? என்று கேள்விகளை நோக்கி பயணித்தது.

உண்மையிலேயே மதுரையின், உலகமயமாக்கல் நடவடிக்கைகள் ஏதும்  நடைபெற வில்லை என்ற உண்மையை கூறாது,   பழமை மாறவில்லை, அதே குறுகிய சந்துகள், உட்கட்டமைப்பு வசதிகள் பெருக்கிட இயலாத விதிமுறைகள்  உள்ளன என்று அக்கருத்துக்களையும் கீழ்வரிசை விருந்தினர்களிடம் மட்டும் உரையாட அனுமதிக்கப்பட்டது.

மதுரையில் கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் என்றால், பன்னாட்டு விமான முனையமாக்கிட, மதுரை விமான நிலையத்தை , மதுரை அஞ்சாநெஞ்சர் அண்ணன் அழகிரி அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது எடுத்த முயற்சியால்   புதிய விரிவாக்கம் மட்டுமே நடந்துள்ளது என்பதை கூறிட தவறி விட்டனர். அருணகிரி என்ற அரிமா நண்பர், அரவிந்த் கண் மருத்துவமனை ஆசியாவிலேயே   மிகப்பெரிய ஒன்று, அங்கு பன்னாட்டு மருத்துவர்களும் வந்து மேல்படிப்பு மேற்கொள்ளும் விவரங்களை கூறிட முனைந்தபோது அதற்கும் தடை. 

பாதிப்புக்கள் குறித்து பேசும் போது கல்வியை வளர்த்த மதுரையில், தற்போது தரமான கல்வி நிலையங்கள் உருவாகவில்லை  என்று கீழ்வரிசையில் இருந்தோர் அங்கலாய்த்தனர்.

,ஆனால்,  உண்மையான கந்து வட்டிக் கொடுமைகள், சிறிசு முதல் பெரிசு வரை உழைக்கும் சௌராஷ்டிரா மக்களின் உழைப்புத் திறன், வடமாநிலத்தவர் வருகையால் இழந்துவரும் அன்யோன்யம் குறித்து வாய் திறக்க விடவில்லை.

மதுரையைவிட நீங்கள் பார்த்து பொறாமைப் படும் ஊர் எது என்ற வினாவுக்கு பலரும் கோவை என்று (அதுவும் கீழ்வரிசை நண்பர்கள்) மொழிய அதை  மட்டும் கேட்டவர், ஈரோடு என்று நான் கத்தியும் காதில் வாங்கி கொள்ளவில்லை.

ஏனெனில், கோவை எப்போதுமே மதுரையை விட சீதோஷ்ண நிலையிலும் சரி, தொழில் வளர்ச்சியிலும் சரி, பொருளாதாரத்திலும் உயர்ந்தநிலையில் இருந்த ஊர். ஆனால், மதுரையைவிட கீழ் நிலையில் இருந்த ஈரோடு இன்று மதுரையை விட செழிப்பாக பொறாமைப்படும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதை ஒப்பிட அனுமதிக்க வில்லை.

இறுதியாக, கீழ்வரிசைக்காரர்கள் எல்லோரும் வரிசைக்கட்டி,மதுரையின் பெருமை என்றால் அது 'அமெரிக்கன் கல்லூரி' என்று சொல்லி வைத்தார்போல் விளம்பரதாரர் நிகழ்ச்சி போன்று ஆக்கி விட்டனர்.

ஏனோ, பட்டிமன்றத்துக்கு கட்டியம் கூறிய தியாகராசர் கலைக் கல்லூரி, அரசியலில் பல சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களை தந்த மதுரைக் கல்லூரி, உலகம்முழுதும் வியாபித்திருக்கும் வல்லுனர்களை தந்த  தியாகராசர் பொறியியல்  கல்லூரி டோக் மூதாட்டி கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி குறித்து  மறந்தது ஏனோ?

சின்னக்கலைவாணர் விவேக், வைகைப்புயல் வடிவேலு காமெடிக்கு பின்னர் ஊடகங்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெற வைத்தது மதுரை மண்ணின் பெருமையே.  மகாகவி பாரதியார் பணியாற்றிய ஊர் என்ற பெருமை, இரமண மகரிஷி  படித்தது, இன்னிசைப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பிறந்த ஊர் என்ற பெருமைகளை பட்டியலிட மறந்தது ஏனோ?

"ஏன்? எங்களை அழைக்க வேண்டும், பொதுவான கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு, கோபிநாத்தின் கருத்துக்களை மட்டும் திணிக்கும் களமாக "நீயா? நானா?" மாறிவருகிறது" என்று என்னருகே   அமர்ந்திருந்த ஒரு ஆசிரியை புலம்பி தள்ளி விட்டார்.  

இரவு 11.20 மணியளவில் நிகழ்ச்சி படப்பிடிப்பு முடிந்து வெளிய வந்த போது பல இளம்பெண்கள், இளைஞர்கள் 'நீயா? நானா?' என்றத் தலைப்பை இனி கோபிநாத்தின் 'நானே! நானா?' என்று மாற்றிக் கொள்ளட்டும்என  புலம்பி கொண்டது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டுள்ளது.

 அப்போது எனது செவிகளில், நமது வேல்முருகன், சுப்ரமணியபுரம் படப்பாடலில் பாடிய, 
"மதுர குலுங்க  குலுங்க" பாடல் வரிகளில் பரிணமித்த மதுரையின் மாண்புகள் ஒலிக்க..


மாமதுரை போற்றுதும்..மாமதுரை போற்றுதும்.. என்று முணுமுணுத்து  கொண்டே எனது இரு சக்கர வாகனத்தில் பயணிக்கத் தொடங்கினேன்.



Tuesday, 2 June 2015

வா வா தலைவா வணக்கம்..வணக்கம்.. நீ வந்தால் எங்கள் வாழ்வு மணக்கும்





வாலிபக் கவிஞர் வாலி அவர்கள், என்றும் வாலிபரான அய்யா அவர்கள் பற்றிய  வாழ்த்துப்பாவில் இடம்பெற்ற வரி..
"கவிஞருக்கெல்லாம் கவிஞரய்யா...
மனிதருக்கெல்லாம் மனிதரய்யா "  

அதனால்தான், 

ஒரு கவிஞன் ஏக்கப் பெருமூச்சுடன் எழுதினான், பாடிய பாடல் வரிகள்..

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால் பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்" என ..
 அக்கவிஞனின் ஏக்கத்தை போக்கும் வண்ணம், குடிசை மாற்று வாரியம் அமைத்து, குடிசையில் வாழ்ந்தோரை, கோபுரம் போன்ற அடுக்கு மாடி குடியிருப்புகளில் அமர வைத்து அழகு பார்த்த செம்மொழிக் கவிஞர் அய்யா உங்களை..
"வா வா தலைவா வணக்கம்..வணக்கம்..
நீ வந்தால் எங்கள் வாழ்வு மணக்கும்" என மக்கள் 
2016ல் தங்கள் தலைமையில் தமிழ்நாடு சிறக்க எதிர் நோக்குகின்றனர்..
வணங்கி மகிழ்கிறோம்..

Sunday, 29 March 2015

அழகு நடனம்



அழகு நடனம் காண்க...
கண்ணுறக்கம் கொள்க..
இனிய இரவு வணக்கம்

Friday, 27 February 2015

இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்... - தவப்புதல்வன் (26.08.1972)



இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்..
படம் : தவப்புதல்வன்  (26.08.1972)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் 
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன் 
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் 
நடிப்பு : நடிகர் திலகம் சிவாஜி - கே.ஆர்.விஜயா 
இயக்கம் : முக்தா வி.சீனிவாசன் 
தயாரிப்பு : முக்தா பிலிம்ஸ் (வி.இராமசாமி)
(கல்யாணி இராகத்தில் அமைந்த ஒரு அருமையான பாடல்)

ஆ..ஆ..ஆ..ஹா.ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்.. 
அது இறைவன் அருளாகும்...
இசைக் கேட்டால் புவி அசைந்தாடும் 
அது இறைவன் அருளாகும்...

ஏழாம் கடலும் வானும் நிலமும் 
என்னுடன் விளையாடும் - இசை
என்னிடம் உருவாகும்.. 
இசை என்னிடம் உருவாகும்.. 
இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்.. 
அது இறைவன் அருளாகும்...

என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்..
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்..
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்..
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்..
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்..
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்..
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்..
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்..
ஏழாம் கடலும் வானும் நிலமும் 
என்னுடன் விளையாடும் - இசை
என்னிடம் உருவாகும்.. 
இசை என்னிடம் உருவாகும்..

விதியோடு விளையாடும் ராகங்களே..
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே..
கனலேந்தி வாருங்கள் தீபங்களே..
கனலேந்தி வாருங்கள் தீபங்களே..
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே..
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே..

கத்துங்கடலலை ஓடி ஓடி வரும்..
உந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே..
எந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும்..
இன்னும் வரவில்லை செய்த பாவமென்ன? தீபங்களே..
கண்ணில் கனல் வரப் பாட வேண்டுமெனில்
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே..
தீபங்களே..தீபங்களே.. தீபங்களே.. தீபங்களே..

இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்.. 
அது இறைவன் அருளாகும்..