Wednesday, 11 November 2015

தீபாவளி - தீவாளி - தீபஒளித்திருநாள்.
"கேதாரேஸ்வரர் அல்லது கேதாரகௌரி நோன்பு"

தீபாவளி என்பது சமஸ்கிருத வார்த்தை..

தீபம் என்பது ஒளியைக்குறிக்கும்.. ஆவளி என்பது வரிசை என்பதாகும்..

கார்காலம் தொடங்கும் தமிழ் மாதமான ஐப்பசியில், தேய்பிறை காலத்தில், பதினான்காம் நாளன்று (சதுர்தசி) நரகசதுர்தசி என்றும், அதற்கு அடுத்துவரும் அமாவாசை நாளில், "கேதாரகௌரி" விரதம் எடுக்கின்றனர்.

பொதுவாகவே, நாட்டில் கொண்டாடப்படும் அனைத்து விழாக்களும், குறுவை - சம்பா - தாளடி பருவங்களில் அறுவடை செய்த பின்னர் சூரியன் - நிலம் - நீர் - வான் - காற்று ஆகியவற்றுக்கு நன்றிதெரிவித்து அறுவடைத் திருநாளாகவே கொண்டாடி வந்துள்ளனர் என்பதே நிதர்சனம்.

பின்னர், அந்தந்த பருவங்களை ஒட்டி தீபாவளி - பொங்கல் - சித்திரைத் திருநாள் என்று வகைப்படுத்தி, அதையொற்றி புத்தாடைகள் எடுத்து, பலகாரங்கள் செய்து தங்கள் உறவுகளை பலப்படுத்திட கொண்டாட ஆரம்பித்துள்ளனர் என்றே கருதுகிறேன்.

தட்சிணாயனம் : சூரியன் ஆடி மதம் முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறுமாத காலம், வடதிசையிலிருந்து, தென்திசைநோக்கி பயணம் செய்யும் காலமாகும். இதில் ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் பகல் நேரம் குறைவு.

இருள் நிறைந்த இம்மாதங்களில், விளக்குகளை வரிசையாக அணிவகுத்து ஏற்றிவைத்து தீப ஒளியினைப் பரவச் செய்துள்ளனர்.
இதுவே பின்னாளில், தீபஒளித் திருநாள், தீபாவளி என்றும், கார்த்திகை தீபத்திருநாள் என கொண்டாடப் பட்டுள்ளது போலும்.

பின்னாளில், புராணக்கதைகளின் படி, பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து வந்த இராமனுக்கு வரிசையாக விளக்கேற்றி வரவேற்றதாக ஒரு காரணமும் சொல்லப்பட்டது.

பவுமன் என்பவன் அவதரித்த போது (மகாவிஷ்ணு- பூமாதேவிக்கும் பிறந்தவன்) அவன் பிரமம்னை வணங்கி தனக்கு மரணம் என்பது எனது தாயினால் மட்டுமே நிகழவேண்டும் என்று வரம் பெற்றானாம். அவன் வளர்ந்து அரக்கனாக மாறி மனிதக்குலத்துக்கு இன்னல்கள் விளைவித்து "நரகன்" என்றுப் பெயரால் அழைக்கப்பட்டுள்ளான்.

நரகனின் மக்கள் விரோதப்போக்கை கண்ட திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்து சத்யபாமாவின் துணையுடன், நரகன் என்ற அசுரனை, அழித்தொழித்ததை கண்ட மக்கள் மகிந்து, விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாடினர். அதுவே தீபாவளி ஆனது என்று ஒரு காரணமும் பகரப்பட்டது.

இந்த தீபஒளித் திருநாள், இந்தியா மட்டுமின்றி, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது..

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து, எண்ணெய்க் குளியல் (கங்கா ஸ்நானம்) செய்வர். நல்லெண்ணெய் தேய்த்து, சீகைக்காய் கொண்டு தலைக்குளித்து, புத்தாடை அணிந்து, பலகாரங்கள் செய்துண்டு, பட்டாசுகள் வெடித்து ஆனந்தித்திருப்பார்கள்.

இவ்விழாவையொட்டி இனிப்புக்கள் வகைவகையாக செய்து (குறிப்பாக அதிரசம், சீடை, முறுக்கு, தட்டை, சீயம் மற்றும் வடை, மிச்சர் என்று..) ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர்.

பெற்றோர் - பெரியோரை வணங்கி வாழ்த்துகள் பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மதம் களைந்து ஒன்றுபட்டு, அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபஒளித் திருநாளாகும்..

சைவவேளாண் மக்கள் கந்தப்புராணத்தில், ஐப்பசி மாதம் அமாவாசை நாளில், (தீபாவளியன்றோ அல்லது அடுத்த நாளிலோ), அதற்கு முந்தைய புரட்டாசி மாதம் அஷ்டமி திதி நாளிலிருந்து விரதம் மேற்கொண்டு, கேதாரேஸ்வரர் அல்லது கேதாரகௌரி நோன்பு என்றப்பெயரில் கொண்டாடி வருகின்றனர். தெலுங்கு மொழி பேசுவோர் அனைவருமே இந்நோன்பை மேற்கொள்கின்றனர்.

இந்நோன்பு குறித்து சிலவிவரங்கள்..

ஐப்பசி மாதம் அமாவாசை கூடியநன்னாளில் சிறந்த இக்கேதாரேஸ்வரர் விரத பூஜையைச்செய்யவேண்டும் என்பது கந்தப்புராண வாக்கு. இந்தக் கேதாரேஸ்வரர் கதையைக் கேட்பதால் சகல சௌபாக்கியங்களும், ஐஸ்வர்யங்களும் பெருகும், ஆரோக்கியம் அனைத்தும் விருத்தியாகும்.

இவ்விரத பூஜையை இருபத்தியொரு வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பரிபூரண பலன் இகத்திலும், பரத்திலும் கிட்டிடும் என்பது எம்பெருமான் வார்த்தையாகக் கௌதமர் கூறியுள்ளார்.
மேலும் இந்தப்பூஜையால் சௌபாக்கியம் மட்டுமின்றி மிகுந்த சோபையையும் விரும்பிய பயன்களையும் பெறுவது திண்ணம். சிவலோகத்திலும் சிறப்படையலாம்.

இப்பூஜையை மிகுந்த அடக்க ஒடுக்கத்தோடு அனைவரும் செய்யலாம். அதாவது புரட்டாசி மாதம் அஷ்டமிதிதி சுக்ல பட்சத்திலிருந்து இப்பூஜையைத் தொடங்கி, அமாவாசை வரை செய்ய வேண்டும் என்கிறது கந்தப்புராணம். மஞ்சள் சரடுகளைக் கைகளில் கங்கணமாகக் கட்டிக்கொண்டு சுத்தமான இடத்தில் ஒரு கும்பத்தைப் பூஜையில் உள்ளபடி அலங்கரித்து வைத்து பட்டுத் துணியாலும், இருபத்தியொரு சரடுகளாலும் சுற்றி அதில் நாணயங்கள் போட்டு, அல்லது நவரத்தினம், தங்கம், பவளம் போட்டு சந்தனம், மலர்கள் கொண்டு முறைப்படி அர்ச்சித்து 7 X 3 = 21 மறையோர்களையும் வழிபட்டுப் பூஜையைசெய்யவேண்டும். எனவேதான், இப்பூஜையில் மலர்கள் என்றாலும் பலகாரங்கள் என்றாலும் (குறிப்பாக அதிரசம்), விரளிமஞ்சள், வெற்றிலை, முழுமையான பாக்கு, பழங்கள் என அனைத்துமே இருபத்தியொன்று என்ற எண்ணிக்கையில்தான் வைத்துப் பூஜிக்கபடுகிறது. அது தருணம், காப்பு, நோன்பு முறைகள், நாமாவளிகள் மற்றும் கேதாரேஸ்வரர் கதையைக் கூறக் கேட்டு பூஜித்து வழிபடுகின்றனர்..



இப்படிச் சோழனொருவன் பூஜைசெய்துமிகுந்தப் பலனைப் பெற்றானாம்.அதன் பொருட்டு சோழ மண்டலத்தைச் சார்ந்த எங்கள் மூதாதையர் காலம் முதல், தொன்றுத் தொட்டு இவ்விரதம் மேற் கொண்டு வருகிறோம்.

இந்த ஆண்டு எங்கள் இல்லத்தில் கேதாரகௌரி நோன்பு அம்மனின் வழிபாட்டுடன்.. அன்பு வணக்கம்..